எத்தகைய அடக்குமுறைகள் வந்தாலும் எங்கள் மக்கள் தங்களுடைய நியாயத்துக்காக நிச்சயாகப் போராடுவார்கள் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
யாழ். நகரில் எமது செய்திச் சேவைக்கு விசேடமாக கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் எங்கள் மக்களுக்காக, எங்கள் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் போராடினோம். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றோம்.
இந்த நாட்டில் நாம் சுதந்திரமாகப் போராடக் கூடிய தன்மை இல்லை என்பதுதான் பொலிஸாரால் பெறப்பட்ட நீதிமன்றத் தடை மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படியாக அராஜகமான விதத்தில், அட்டூழியமான விதத்தில் அரசாங்கம் செய்கின்ற அடக்குமுறைகள், ஆக்கிரமிப்புகளை நாங்கள் தட்டிக் கேட்க முடியாது என்ற கோணத்தில் செய்யும் போது நாங்கள் என்ன செய்வது?
எங்கள் மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும். இதுதொடர்பில் முதலில் சிந்திக்க வேண்டியவர்கள் சர்வதேச நாடுகள். ஒரு ஜனநாயக ரீதியான போராட்டத்துக்கு இந்த நாட்டிலே மரியாதை இல்லை என்பது வெளிப்படையாகின்றது. இந்த மரியாதையை யார் பெற்றுத் தர வேண்டும்? நீங்கள் சரியான வழியில் இந்த அராஜகத்துக்கு முடிவு கட்டுவீர்களேயேனால் எங்களுடையவர்கள் நிம்மதியாக வாழக் கூடியதொரு சூழல் இங்கு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
