உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவில் இறுதி அறிக்கை குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதியதொரு குழு நியமித்துள்ளார்.
அமைச்சர் சமல் ராஜபக்ச தலைமையில் இந்த குழு இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை செய்யும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைமைப் பொறுப்பு சமல் ராஜபக்சவினால் வகிக்கப்படுவதுடன், அமைச்சர்களான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, டொக்டர் ரமேஸ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
மேலும் தேசியப் பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை குறித்தும் இந்தக் குழு ஆராய உள்ளது.
இந்த இரண்டு அறிக்கைகளும் குறித்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதிக்கு இந்தக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.