அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை சட்டப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதனை நாடாளுமன்றில் தாக்கல் செய்யுமாறு கோரப்பட்ட போதிலும், அது நிறைவேற்றப்படவில்லை.
அத்துடன், ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக ஒரு சிறப்பு ஜனாதிபதி ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
அதே வாரத்திற்குள் ஆணையத்தின் அறிக்கை குறித்து பரந்த விவாதத்தை நாங்கள் விரும்புகிறோம்.
அரசாங்கத்தை விமர்சிக்கும் அரசியல் தலைவர்களின் குடியுரிமைகளை ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அது ஒரு கோழைத்தனமான அரசியல் செயலாகவே நாங்கள் பார்க்கிறோம்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.