மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நொச்சிமுனை கிராம சேவையாளர் பிரிவில் கடந்த மூன்று வருடங்களாக கிராம சேவையாளராக கடமையாற்றி வரும் கிராம சேவை உத்தியோகத்தரை உடன் இடமாற்றம் செய்யுமாறு கோரி அப்பகுதிப் பொதுமக்கள் இன்று (18) நொச்சிமுனை கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களை அவமதிக்கும் அதிகாரி வேண்டாம், அரச காணியை பணத்திற்கு விற்கும் ஜீ.எஸ். வேண்டாம், பொதுமக்களுக்குச் சேவை செய்யாத அதிகாரி எமக்குத் தேவையில்லை, அனைத்து ஜீ.எஸ்களுக்கும் இடமாற்றம்…ஆனால், இவருக்கு மட்டும் இடமாற்றம் இல்லையாம், பெண்களை மதிக்காத கிராம சேவகர் எமக்கு வேண்டாம் போன்ற பல வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதர்சன் ஆகியோருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துரையாடியதுடன் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கும் வகையில் மகஜர் ஒன்றினையும் பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.
