பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் பருத்தித்துறைப் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை(18) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையில் குறித்த இளைஞன் பயணித்த மோட்டார்ச் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இளைஞனைக் கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வட- கிழக்கில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப் படுத்தக் கோரியும் வட– கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி கடந்த-03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில் பேரணி முடிவடைந்து பத்துநாட்களின் பின்னர் மேற்படி கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.