இலங்கையில் அறிகுறியற்ற கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை தனிமைப்படுத்தல் மையத்தில் வைத்துக் கண்காணிக்கும் காலம் 14 இல் இருந்து 10 நாட்களாக குறைக்கப்படுகிறது.
எனினும் மீதமுள்ள 4 நாட்கள் அவர்கள் வீடுகளில் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்தார்.
தொற்று உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நாளில் இருந்து இந்தப் 10 நாட்கள் கணக்கிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டு 4 அல்லது 5 நாட்களின் பின்னரே சிலர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறானவர்கள் மேலும 5 அல்லது 6 நாட்களையே தனிமைப்படுத்தில் மையங்களில் செலவிடுவார்கள்.
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரிடம்இருந்து ஏனையவர்களுக்கு வைரஸ் பரவும் ஆபத்து 10 நாட்களுக்குப் பிறகு மிகக் குறைவு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆபத்தான 10 நாட்களுக்கு பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தல் மையங்களில் வைப்போம் எனவும் சுதத் சமரவீர கூறினார்.
எனினும் ஆய்வக சோதனைகள் தாமதமானால் அவ்வாறான நோயாளிகள் 10 நாட்களையும் தனிமைப்படுத்தல் மையத்தில் செலவிடக் கூடாது. இது தொடர்பிலும் நாங்கள் ஆராய்வோம் எனவும் சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.