பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் தற்போது கிளிநொச்சியை அண்மித்துள்ளது.
நான்காம் நாளான குறித்த போராட்டம் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமானதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தொடர்போராட்டம் இன்று மதியம் மன்னார் பேருந்து நகரத்தை சென்றடைந்தது.
இதன்போது, தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், விநோநோகராதலிங்கம் உள்ளிட்ட பெருந்திரளான பொதுமக்கள் ஒன்று கூடியிருந்தனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கடந்த 3 ஆம் திகதி பொத்துவில்லில் ஆரம்பமான இந்த போராட்டம் நேற்று இரவு வவுனியாவை சென்றடைந்தது.
இந்தநிலையில் திருகோணமலை – திருகோணேஸ்வரம் ஆலயம் அருகில் இருந்து நேற்று மூன்றாவது நாளாகவும் இந்த போராட்டம் ஆரம்பமானது.
இந்த போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வழியாக முள்ளிவாய்க்கால் பகுதியை சென்றடைந்தது.
பின்னர் அங்கிருந்து வவுனியாவை நோக்கி வாகன பேரணியாக இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அந்த போராட்டம் தற்போது கிளிநொச்சியை அண்மித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் தெரிவித்தார்.
சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு நிரந்தரத் தீர்வை கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.