பல்வேறு குற்றச் செயற்பாடுகளுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள 129 சந்தேக நபர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் உத்தரவின் பேரில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இலங்கையில் பல்வேறு குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டு தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய இவ்வாறு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள நபர்களுக்கு எதிராக நீதிவான் நீதிமன்றத்தில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அது தொடர்பில் சர்வதேச பொலிஸாருக்கு தெரிவித்து அந்த நபர்களைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வாய்ப்புள்ளது.
இதன் பிரகாரமே சர்வதேச பொலிஸார் இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமறைவாகியுள்ளவர்களில் 129 சந்தேக நபர்களுக்கு எதிராக தற்போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் 40 பேர் நிதி மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களாவர்.
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்கள் 87 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் நீல எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.
அதற்கமைய, இவ்வாறு தப்பிச் சென்றுள்ள அனைத்து சந்தேக நபர்களையும் சர்வதேச பொலிஸாரிடம் கலந்துரையாடி நாட்டுக்கு அழைத்து வந்து, நாட்டு சட்டவிதிகளுக்கமைய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.