இலங்கையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் எவருக்கும் பலவந்தமாக ஏற்றப்படமாட்டாது எனவும், சுய தீர்மானத்தின் அடிப்படையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொதுமக்கள் சுய தீர்மானத்தின் அடிப்படையில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் வாக்காளர் இடாப்பில் இருந்தே தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கான பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படுகின்றது. தடுப்பூசிகளை வழங்கும்போது மக்களிடம் ஒப்புதல் கையொப்பம் பெறப்படவுள்ளது.
அரச சேவையில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொரோனாக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்குமே தடுப்பூசி விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
நாட்டின் ஏனையவர்களுக்கும் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தடுப்பூசிகள் இலவசமாகவே வழங்கப்படும் என்றார்.