சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளமான ‘மவ்ரட்ட’ செய்தி வெளியிட்டுள்ளது.
கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் கொரோனாத் தொற்றுக்கான மூலிகை மருந்து எனக் கூறப்பட்ட பாணியை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் அருந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தென்னிலங்கை ஊடகங்கள் சுகாதார அமைச்சருக்கான கொரோனாத் தொற்றுத் தொடர்பிலான சில தகவல்களை வெளியிட்டுவருகின்றன.
சுகாதார அமைச்சர் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அன்டிஜன் பரிசோதனைகள் கூடுதலாக நேர்மாறான முடிவுகளைத் தெரிவித்து வருவதால் PCR பரிசோதனை முடிவுகளின் பின்னரேயே உறுதிப்படுத்தப்பட்ட விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சுகாதார அமைச்சருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிபிசியின் சிங்கள சேவையும் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.