மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரும், குடிமக்கள் சமூக அமைப்பில் பங்காற்றி வரும் தமிழருமான சிவயோகநாதனை,புலனாய்வுத்துறையினர் மூலம் விசாரணை என்ற பெயரில் சிங்கள பேரினவாத அரசு அச்சுறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திருக்குரியது நாம் தமிழர் கட்சியின் தலைவரும், நடிகருமான சீமான் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இது முழுக்க முழுக்கச் சிங்கள அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்த மக்கள் பிரச்சினைகளில் முன்னின்று குரல்கொடுத்து வரும் சிவயோகநாதன், அண்மையில் இலங்கை அரசுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான ஆவணத்தில் மட்டக்களப்பு மாவட்ட குடிமக்கள் அமைப்புக்கள் சார்பாகக் கலந்து கொண்டவர் என்பதுடன்,மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய சிங்கள ஆதிக்கச் செய்கைகள், தமிழ் நில உரிமையாளர்கள் மீது சிங்களவர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக முன்னின்று குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் மீதான விசாரணை என்பது அவருடைய மனித உரிமை செயற்பாடுகளை முடக்கும் நோக்குடன் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலேயாகும்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிரான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், அதில் மட்டக்களப்புத் தமிழர்கள் சார்பில் கையொப்பம் இட்ட சிவயோகநாதனை விசாரணை என்ற பெயரில் பொய்யான காரணங்களைக் கூறி அவருடைய குடும்பத்தினரையும் அச்சுறுத்தி அலைக்கழிப்பதற்கான காரணம் அவர் இலங்கை அரசுக்கு எதிரான ஜெனிவா ஆவணத்தில் கையெழுத்து இட்டார் என்பதே.
இதன்மூலம் இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் மீது எவ்வித பன்னாட்டு விசாரணையும் மேற்கொள்ள முடியாமல் தடை ஏற்படுத்தவும், எதிர்காலத்தில் இது போன்ற செயற்பாடுகளில் தமிழர்கள் யாரும் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கும் விதமாகவும் எடுக்கப்படும் பேரினவாத நடவடிக்கையாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கை பேரினவாத அரசு புலிகள் பெயரைச் சொல்லி, இனியும் இது போன்ற மிரட்டல்கள் மூலம் தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் முன்னெடுப்புகளை , இன உரிமை போராட்டங்களை நசுக்கிவிடலாம் என்று நினைப்பது ஒருபோதும் நிறைவேற போவதில்லை.
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் , ஈழத்தில் வாழும் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் இது போன்ற உளவியல் தாக்குதல்களை இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று எச்சரிக்கிறேன்.
இலங்கை அரசின் இத்தகைய இனவாத செயல்பாடுகளை, உலகத் தமிழர்கள் ஓரணியில் நின்று உடனடியாகச் சர்வதேச அரங்கின் கவனத்திற்குக் கொண்டு சென்று, சிங்கள அரசின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டிய காலச்சூழல் இதுவென்று உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்என்றும் தெரிவித்துள்ளார்.