வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்துவரும் நடவடிக்கைகளை சுகாதார வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுற்றுலாத்துறை தொழில்துறையை நம்பி வாழ்கின்ற நிலையில் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றலோடு தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் முழுமையாக சுற்றுலாத்துறையை நம்பிவாழும் குடும்பங்கள் கொரோனா வைரஸ் சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வாழ்வாதாரம்இ பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
கடந்த வருடம் முழுவதும் சுற்றுலாத்துறை பெரும் வீழ்ச்சிகண்டுள்ள நிலையில் அத்தகைய குடும்பங்கள் பொருளாதார ரீதியில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளன. அதனைக் கருத்திற் கொண்டே அரசு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மீண்டும் சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அழைத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன் முதற்கட்டமாகவே உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அதில் சிறு குறைபாடுகள் இடம்பெற்றுள்ளன என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வதோடு அந்தக் குறைபாடுகள் தற்போது இனம் காணப்பட்டுள்ளன.
அவ்வாறான குறைபாடுகள் இடம்பெறாதவகையில் தொடர்ந்தும் சுற்றுலாப்பயணிகளை அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.