வீட்டு வர்ணப் பூச்சு வேலைக்கு பயன்படுத்திய ரின்னரை மதுபானம் என நினைத்து அருந்திய இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் தென்மராட்சி நாவற்குழி பகுதியில் நேற்றுமுன்தினம் (06) இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்கு வர்ணப் பூச்சு வேலை இடம்பெற்ற நிலையில் நேற்றுமுன்தினம் காலை நித்திரையில் இருந்து எழுந்த குறித்த இளைஞர் தூக்க கலக்கத்தில் ரின்னரை மதுபானம் என நினைத்து அருந்திவிட்டு மீண்டும் படுத்துறங்கியுள்ளார்.
மதியம் 2 மணியாகியும் எழுந்திருக்காத நிலையில், வீட்டார் தட்டி எழுப்பியுள்ளனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்துள்ளதுடன் அருகில் ரின்னர் போத்தல் இருந்துள்ளதையும் அவதானித்துள்ளனர்.
உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தென்மராட்சி நாவற்குழி 300 வீட்டுத் திட்ட குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் கணபதிப்பிள்ளை ஜனாதீபன் எனும் 37 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.