தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.
அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவமானது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளேயே ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக்கோரி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில், சாத்தான்குளம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தபோது காவல்துறையினரையும் செய்தியாளர்களையும் மிரட்டியதுடன் ஏசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பணபலம், ஆள்பலத்தால் சாட்சிகளை மிரட்டிக் கலைக்க வாய்ப்புள்ளதால் விசாரணையைக் குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இது தொடர்பான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளத்துக்கு மாற்றக்கோரிய வழக்கில் சி.பி.ஐ. மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏனைய 8 பேரும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.