சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் ஆலை உரிமையாளர் ஒரு வாரத்திற்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு பணியாளர்கள் கடந்த 12ம் தேதி மதியம் சாப்பாட்டுக்கு தொழிலாளர்கள் தயாராகும்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே சில தொழிலாளர்கள் பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்கள் சிவகாசி, சாத்தூர், மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், சாத்தூர் வெடி விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.
இந்த வெடிவிபத்து மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே குத்தகைக்காரர்கள் மூவர் கைதான நிலையில் ஆலை உரிமையாளர் தலைமறைவாக இருந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் சந்தன மாரி இன்று காலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.