நினைவிடத்தின் மேற்புறம் ஐ.ஐ.டி நிபுணர்கள் மூலம் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிட வளாகத்தில் 8555 சதுர அடி பரப்பளவில் சிறந்த கட்டட வடிவமைப்புடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.அருங்காட்சியகத்தில் பல்வேறு மெழுகு சிலைகள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நினைவிடத்தின் பக்கவாட்டுகளில் உயர்தர பளிங்கு கற்களும், தரைப் பகுதியில் உயர்தர கருங்கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. நினைவிட வளாகத்தில் சுமார் 8500 சதுர அடி பரப்பளவில் அறிவுத்திறன் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவிட வளாகத்தில் 110 அடி நீளத்திற்கு மேற்கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை கூரைகளின் மீது சூரிய ஒளி சேமிப்பு தகடுகள் பதிக்கப்பட்டு, அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.மேலும், பார்வையாளர்களை கவரும் வகையில் நீர் தடாகங்கள், சிறந்த தோட்ட கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. நினைவிடத்தை அழகுபடுத்தும் வகையில் செடிகள் மற்றும் மரங்களும் நடப்பட்டுள்ளன. தோட்டக்கலை வல்லுநர்களின் ஆலோசனைபடி பல்வகை நாட்டு மரங்களை கொண்டு மியாவாக்கி தோட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.நுழைவாயிலில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும், நினைவிடத்தின் இருபுற நுழைவு பகுதிகளிலும் ஆண் சிங்க வடிவில் கருற்கற்களால் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது. நினைவிட வளாகத்தில் மின்சார வசதி, அலங்கார வண்ண மின் விளக்குகள், காண்காணிப்பு கேமரா வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அணையா விளக்கு ஒன்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.