இலங்கையில் ஹட்டன் வலயத்திற்குட்பட்ட நோர்வூட் பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 28ஆம் 30ஆம் திகதிகளில் பாடசாலை கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பின்னர் அவருக்கு நெருக்கமாக செயற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் முடிவாக கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறு இருக்க, இலங்கையின் தனியார் கல்வி நிலைய வகுப்புக்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கொரோனா வேகமாகப் பரவும் பிரதேசங்களிலிருந்து வெளிமாவட்ட ஆசிரியர்கள் சிலர் சென்று இரகசியமான முறையில் தனியார்கல்வி நிலையங்களை இயக்கி வகுப்புக்களை இரகசியமானமுறையில் பெருமளவு பணம் பெற்று நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்விடயம் அப்பகுதிகளின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் துணையுடன் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் குறித்த தனியார் கல்வி நிலைய வகுப்புக்கு செல்லாத மாணவர்களது வீடுகளுக்குச் சென்று தமது கல்வி நிலைய வகுப்புக்களுக்கு மாணவர்களை அனுப்புமாறு பெற்றோர்களை வற்புறுத்தி வருவதாகவும் பெற்றோர்களால் கூறப்படுகின்றது.